
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதே போல தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்துள்ளன.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி இந்தியாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து வரும் கேப்டன் ரோஹித் சர்மா டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதே போல அழுத்தமான தருணங்களில் அபாரமாக செயல்பட்டு சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலியும் கூடுதல் புள்ளிகளை பெற்று 6ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அவர்களை விட சமீப காலங்களாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ஷுப்மன் கில் தொடர்ந்து உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.