
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஐசிசி ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தானின் பாபர் ஆசாம், இந்திய அணியின் ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் 2,3 மற்றும் 4ஆம் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர்த்து நியூசிலாந்தின் வில் யங் 8 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தையும், இந்திய அணியின் கேஎல் ராகுல் 2 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்க அணியின் ரஸ்ஸி வேன்டர் டுசென் 3 இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தையும், இங்கிலாந்தின் பென் டக்கெட் 27 இடங்கள் முன்னேறி 17ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.