
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் 14 மாதங்கள் கழித்து நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஏனெனில் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணி விளையாடும் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு தகுந்தார் போல் அவர்களும் கடந்த ஒன்றரை வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தனர். இருப்பினும் தற்போது அணிக்கு திரும்பியுள்ளதால் அவர்கள் மீண்டும் டி20 உலகக் கோப்பையில் கடைசி முறையாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அதில் அசத்துவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் இந்தியாவுக்கு தேவை என்று தெரிவித்துள்ளார்.