
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி 177 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையுமே தலா ஒரு ரன்னுக்கு முறையே சிராஜ் மற்றும் ஷமி வீழ்த்தினர். 2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மூன்றாவவது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்த லபுஷேனை வீழ்த்திய ஜடேஜா, அதற்கடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவையும் வீழ்த்தினார். மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்கு பின் ஜடேஜா மளமளவென ஆஸ்திரேலிய வீரர்களை வீழ்த்தினார். லபுஷேன்(49), ரென்ஷாவை(1) தொடர்ந்து ஸ்மித்தையும் 37 ரன்களுக்கு க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஜடேஜா.