
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளையும், பார்கர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜென்சன் 84 ரன்களும், பெடிங்ஹாம் 56 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது.
இதன்பின் 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.