Advertisement

IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement
IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 20, 2024 • 05:44 PM

வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 20, 2024 • 05:44 PM

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

Trending

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து ஸாகிர் ஹசன் 3 ரன்களிலும், அடுத்து வந்த மொமினுல் ஹக் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.  பின்னர் ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 20 ரன்களிலும், முஷ்ஃபீகூர் ரஹீம் 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த ஷாகிப் அல் ஹசன் - லிட்டன் தாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாட முயன்ற லிட்டன் தாஸ் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 32 ரன்களை எடுத்த நிலையில் ஷாகிப் அல் ஹசனும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 27 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஹசன் மஹ்மூத் 9 ரன்களிலும், தஸ்கின் அஹ்மத் 11 ரன்களிலும், நஹித் ரானா 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரோஹித் சர்மா இந்த இன்னிங்ஸிலும் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 19 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த விராட் கோலியும் 17 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தஸ்கின் அஹ்மத், நஹித் ரானா, மெஹிதி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 308 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.  

Also Read: Funding To Save Test Cricket


 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement