
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற குழப்பமும் நீடித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரமே ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்கள் என்ற தகவல் வெளியான நிலையில் இன்றைய தினம் பிசிசிஐ அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.