
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதன்பின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார். அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது.