
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவாரா, குல்தீப் யாதவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா, கருண் நாயர் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பாரா என பல்வேறு கேள்விகளுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இளம் வீரர் ஒருவரை அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் பிசிசிஐ ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்ததால் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அதுமட்டுமில்லாமல் அவரது பேட்டிங் ஃபார்மும் கேள்விக்குள்ளானது.