
இந்திய அணி அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்ததுடன், சொந்த மண்ணில் முதல் முறையால ஒயிட்வாஷ் ஆகியும் அதிர்ச்சியளித்துள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.