இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை சிறப்பான தொடக்கத்தை வ்ழங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்கா, அவரைத் தொடர்ந்து 41 ரன்களைச் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட்- மேத்யூ ரென்ஷா இணை அணியை சரிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதில் ஷார்ட் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்திருந்த மேத்யு ரென்ஷாவும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 24 ரன்களையும், கூப்பர் கணொலி 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 236 ரன்களில் ஆல் அவுட்டும் ஆனது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.