இந்தூர் மைதானத்தில் ரேட்டிங்கை மாற்றிய ஐசிசி!
இந்தூர் மைதானத்திற்கு மோசம் என்று வழங்கிய ரேட்டிங்கை சராசரிக்கும் குறைவு என்று மாற்றுமாறு அவர்கள் கொடுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை தற்போது மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா கடுமையாக விமர்சித்தது.
இருப்பினும் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் 2 போட்டியில் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணியை அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டை பொய்யாக்கியது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை அற்புதமாக பந்து வீசி மடக்கிய ஆஸ்திரேலியா இறுதியில் மிகச் சிறப்பான வெற்றி பெற்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.
Trending
அதை விட முதல் நாளில் முதல் ஓவரிலேயே தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக போட்டி நடுவர் புகார் செய்ததை ஏற்றுக் கொண்ட ஐசிசி அதற்கு தண்டனையாக 3 கருப்பு புள்ளிகளை வழங்கியது. அதன் காரணமாக பின்னடைவை சந்தித்த இந்தூர் கிரிக்கெட் மைதானம் அடுத்த 5 வருடத்திற்குள் 5 கருப்பு புள்ளிகளை தொடும் போது ஒரு வருடம் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு தடை பெறுவதற்கான அபாயத்தை சந்தித்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் காபா மைதானத்தில் பச்சை புற்களுடன் கூடிய பிட்ச்சை உருவாக்கி தென் ஆபிரிக்காவை 2 நாட்களுக்குள் சுருட்டி ஆஸ்திரேலியா வென்ற போது கூட “சராசரிக்கும் குறைவு” என்று ரேட்டிங் வழங்கிய ஐசிசி 2 நாட்கள் கடந்து ஓரளவு சரிசமமாக நடைபெற்ற இந்தூர் பிட்ச்சை மட்டும் மோசம் என ரேட்டிங் வழங்கியது சரியானதல்ல என்று சுனில் கவாஸ்கர் போன்ற இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மறுபுறம் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்ட காரணத்தாலேயே அந்த மாதிரியான பிட்ச் உருவாக்கியதாக மத்திய பிரதேச வாரியம் குற்றம் சாட்டியது. அதனால் தாங்கள் செய்த தவறை திருத்திக் கொள்வதற்காக மோசம் என்று இந்தூர் மைதானத்திற்கு வழங்கிய ரேட்டிங்கை மறு பரிசீலனை செய்யுமாறு ஐசிசியிடம் பிசிசிஐ கடந்த வாரம் மேல்முறையீடு செய்தது. அதை ஏற்றுக் கொண்ட ஐசிசி இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டி காணொளிகளை மறு ஆய்வு செய்தது.
குறிப்பாக வாசிம் கான், ரோஜர் ஹார்பர் மற்றும் ஐசிசி கமிட்டி உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் அந்த காணொளியை ஆராய்ந்து மோசம் என்று ரேட்டிங் வழங்கும் அளவுக்கு மோசமான பவுன்ஸ் இந்தூர் பிட்ச்சில் காணப்படவில்லை என்பதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். அதனால் மோசம் என்று வழங்கிய ரேட்டிங்கை சராசரிக்கும் குறைவு என்று மாற்றுமாறு அவர்கள் கொடுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை தற்போது மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது இந்தூர் பிட்ச் மோசம் அல்ல சராசரிக்கும் குறைவு என்று அறிவித்துள்ள ஐசிசி 3 கருப்பு புள்ளிகளையும் ஒன்றாக குறைத்துள்ளது. இதனால் பிசிசிஐ மற்றும் இந்தூர் மைதான நிர்வாகம் நிம்மதியடைந்துள்ளது. ஏனெனில் 3 கருப்பு புள்ளிகள் நிலுவையில் இருந்தால் அடுத்த 5 வருடத்திற்குள் நிச்சயமாக ஏதேனும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் போது இதே போல 2 கருப்பு புள்ளிகள் மேலும் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால் 12 மாதங்கள் இந்தூர் மைதானம் தடை பெற்றால் வருங்காலங்களில் ஐசிசி தொடர்களை நடத்துவதற்கு பிசிசிஐக்கு பின்னடைவு ஏற்படும். ஆனால் தற்போது 3 என்பது 1 புள்ளியாக குறைக்கப்பட்டுள்ளது பல வகைகளிலும் பிசிசிஐக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now