
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதை தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று உலகக்கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், வரும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்கி வெற்றியும் கண்டனர். அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது.
ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தனர். அதனால் அவர்களை கழற்றி விட்டு 2024இல் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை களமிறக்கும் வேலைகளை பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு செய்து வருகிறது.