
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2 போட்டிகளில் 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் தடுமாற்றமாக செயல்பட்டு 272/8 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாஹிதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 ரன்களும் ஓமர்சாய் 62 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 273 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.
இருப்பினும் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட இஷான் கிஷன் 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 47 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து சில உலக சாதனைகளை படைத்து ஆட்டமிழந்தார். இறுதியில் விராட் கோலி 55, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே வென்ற இந்தியா புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆஃப்கானிஸ்தான் சார்பில் ரசித் கான் 2 விக்கெட்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது.