
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகப்சடமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 2 ரன்களையும், ஷாய் ஹோப் 26 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும், ஷாய் சுதர்ஷன் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஷுப்மன் கில்லும் அரைசதம் கடந்த நிலையில், 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் தனது 11ஆவது சதத்தை பூர்த்தி செய்து 100 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த துருவ் ஜூரெல் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் துருவ் ஜூரெல் தனது முதல் சதத்தையும், ரவீந்திர ஜடேஜா தனது 6ஆவது சதத்தையும் விளாசினர். இதன் மூலம் இரண்டம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 448 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில், இந்திய அணி எந்த பந்துகளையும் சந்திக்காமல் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.