
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியாதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு மாற்றாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு முன்னதாக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரிஸர்வ் வீரர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியை எட்டியதாகவும், இருப்பினும் அவரின் காயம் குறித்த அபாயம் காரணமாக இத்தொடருக்காக அவரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் தேர்வாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி, பும்ரா ஐந்து வாரங்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், அதைத் தொடர்ந்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.