
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியனது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் இங்கிலாந்து நிலைமைகளில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு எதிரணி பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. மேற்கொண்டு இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவுள்ள அவர் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்ச்சர் சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.