
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது 35 வயது கடந்து விட்டனர். அதனால் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட வேண்டும் என்று மறைமுகமாக கருதும் பிசிசிஐ அதற்கான வேலையை முதலாவதாக டி20 கிரிக்கெட்டில் தொடங்கியுள்ளது. அதற்கேற்றார் போல் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோற்க ரோஹித், அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர்.
இதனால் காலம் கடந்த அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் புதிய இளம் அணியை களமிறக்குவதற்கான வேலையை பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் கடந்த வருடமே தொடங்கினார்கள். அதன் காரணத்தால் என்னவோ தெரியவில்லை 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மேற்கொண்டு இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட இந்தியாவுக்காக விளையாடாமல் இருந்து வருகின்றனர்.
ஆனால் 2023 உலகக் கோப்பையில் நிறைய இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார்கள். அதன் காரணமாக இன்னும் 6 மாதத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.