
KL Rahul Record: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 11 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களைப் பூர்த்தி செய்த நான்காவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்சமயம் இங்கிலாந்து அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது.
அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஜாம்பவான்கள் வரிசையில் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.