ரோஹித் சர்மாவுக்கு சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - மனோஜ் திவாரி!
அனைத்து வடிவங்களிலும் சேவை செய்த கேப்டனுக்கு, சமூக ஊடக பதிவுகள் மூலம் அல்லாமல், களத்தில்தான் சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான ரோஹித் சர்மா இதுநாள் வரையிலும் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களைக் குவித்துள்ளர். இதில் 18 அரைசதங்களும், 12 சதங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சேவை செய்த கேப்டனுக்கு, சமூக ஊடக பதிவுகள் மூலம் அல்லாமல், களத்தில்தான் சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,"ரோஹித் சர்மா சமூக ஊடகங்களில் விளையாடாமல் மைதானத்திலேயே ஓய்வு பெற்றிருந்தால், அது மிகவும் பொருத்தமான பிரியாவிடையாக இருந்திருக்கும்.
அது நம் அனைவருக்கும் சிறப்பாக இருந்திருக்கும். டெஸ்ட் கேப்டனாக அவரது சாதனையைப் பாருங்கள், அது மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார், 3 போட்டிகளில் டிரா செய்துள்ளார். எனவே அவரது வெற்றி விகிதம் குறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மனோஜ் திவாரியின் இக்கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா உள்ளார். அவர் இத்தொடரில் இதுவரை 40 போட்டிகளில் விளையாடிவுள்ள நிலையில் அதில் 9 சதங்களையும், 8 அரைசதங்களையும் அடித்ததுடன், 2716 ரன்களைச் சேர்த்துள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்திருந்தார். தற்போது டெஸ்ட் தொடரில் இருந்தும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே ரோஹித் சர்மா இந்திய ஜெர்சியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now