
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முதலிரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்ற நிலையில், அதில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்களை குவித்தது. அண்டஹ் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 87 ரன்களையும், மேத்யூ பிரீட்ஸ்கி 83 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 82 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 23 ரன்களிலும், சௌத் ஷகீல் 15 ரன்னிலும், ஃபகர் ஸமான் 41 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இணை அபாரமாக விளையாடியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து 4ஆவது விக்கெட்டிற்கு 260 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.