
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐசிசி தரவரிசை பட்டியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பார்த்த வீரர்கள் பெரிய அளவில் செயல்படாமல் போக, எதிர்பார்க்காத சில வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்தியிருக்கிறார்கள். சில மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமுக்கும், இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கும் இடையே ஒரு பெரிய போட்டி நடந்து வருகிறது.
பாபர் ஆசாம் முன்னணியில் இருக்க தற்பொழுது இருவருக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் மிகவும் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் 818 புள்ளிகள் எடுத்து இருக்க, கில் 816 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியிருக்கிறார். விராட் கோலி ஏழாவது இடத்தில் தொடர்கிறார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மூவரும் டாப் 10 இடங்களில் நீடித்துவருகின்றனர்.