
தென் ஆப்பிரிக்க அணி கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று லாகூரில் உள்ள கடஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - கேப்டன் ஷான் மசூத் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 93 ரன்களை எடுத்திருந்த நிலையில் இமாம் உல் ஹக் விக்கெட்டை இழந்து 7 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டர். அவரைத் தொடர்ந்து 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 76 ரன்களை எடுத்த கையோடு ஷான் மசூதும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 23 ரன்களிலும், சௌத் ஷகீப் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களைச் சேர்த்துள்ளது.