விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார் - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறக்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வருகிறார். அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 14போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 700 ரன்களுக்கு மேல் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தேர்வு குழுவினர் இன்னும் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியின் தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் அதிகளவில் இடதுகை வீரர்கள் இல்லை. எனவே அவர்கள் ஜெய்ஸ்வாலை அணியின் தொடக்க வீரராக களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் அவர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தொடக்க வீரர்களாக களமிறக்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஏனெனில் விராட் கோலியால் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மேற்கொண்டு அவரை சுற்றி விளையாடும் வீரர்களாலும் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாட முடியும். இதனால் அணியில் உள்ள மற்ற வீரர்களும் தங்கள் விருப்படி விளையாட முடியும். அதிலும் பெரிய போட்டிகள் என்று வரும் பொழுது விராட் கோலி போன்ற அனுபவமும் தரமும் கொண்ட ஒரு வீரரை நீங்கள் வெளியில் வைக்கவே முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now