
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் 15ஆம் தேதி முடிந்த உடன் வரும் 18ஆம் தேதி ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேஎல் ராகுல் தனது திருமண பணிக்காக செல்வதால் அவர் பங்கேற்கவில்லை.
ஒருநாள் தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார் அவருக்கு துணை கேப்டனாக ஹ்ர்திக் பாண்டியா இந்த தொடரிலும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுலுக்கு பதிலாக கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆல் ரவுண்டர் ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.