
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 2) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேக்னரைன் சந்தர்பல் ரன்கள் ஏதுமின்றியும், ஜான் காம்பெல் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய அலிக் அதனாஸ் 12 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 13 ரன்களுக்கும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்களிலும், ஷாய் ஹோப் 26 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களைச் சேர்த்த கையோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த சாய் சுதர்ஷனும் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார்.