
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 06) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கும். அதேவேளை சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியுள்ள ஆஸ்திரேலிய அணியானது இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முயற்சியிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய ரோஹித் சர்மா இப்போட்டி முதல் இந்திய அணியில் இணைந்துள்ளார். இதனால் நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் முந்தைய போட்டியில் தொடக்க வீரராக கேஎல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவரது இடத்தை மாற்றக்கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் கேஎல் ராகுல் எந்த வரிசையில் களமிறங்குவார் என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.