
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் பயிற்சி அமர்வின் போது காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. மேலும் காயம் காரணமாக நேற்றைய பயிற்சி அமர்வில் இருந்தும் பந்த் பாதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களி ரிஷப் பந்த்தும் ஒருவராக இருக்கிறார். மேலும் அவருக்கு இங்கிலாந்தில் விளையாடிய் அனுபவமும் உள்ளது. இதனால் அவரது காயம் தற்சமயம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.