
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 77 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.