
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 65 ரன்களையும், ஜோ ரூட் 69 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 41 ரன்களையும் சேர்க்க, இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திரா ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, துணைக்கேப்டன் ஷுப்மன் கில் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் ஷுப்மன் கில் 60 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா தனது 32ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின் ரோஹித் சர்மா 119 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களையும், அக்ஸர் படேல் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 44.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். \