
ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு சுருண்டது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் டேவிட் வார்னர் 41 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 46 (71) ரன்களும் எடுக்க பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் களையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஹேசல்வுட், ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர்.
அதனால் 2/3 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்ற திண்டாடிய இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆடரில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். நேரம் செல்ல செல்ல நம்புறமாக செயல்பட்ட இந்த ஜோடியில் விராட் கோலி 85 ரன்களும், கேல் ராகுல் 97 ரன்களும் எடுத்து 41.2 ஓவரிலேயே இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி அசாத்தியமான வெற்றி காண வைத்தனர்.