IND vs AUS, 4th Test: புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை தொட்டுள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் இந்திய அணி எடுத்தது.
இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ரோஹித் சர்மா 58 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சொந்த மண்ணில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Trending
அசாருதீன் 33 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் ரோஹித் சர்மா 36 இன்னிங்ஸில் 2000 ரன்களை தொட்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 38 இன்னிங்ஸிலும், விராட் கோலி 39 இன்னிங்சிலும், டிராவிட் 40 இன்னிங்சிலும் இந்த மைல் கல்லை தொட்ட நிலையில் ரோகித் சர்மா அவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை அடித்த இந்திய 8ஆவது வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா ஏழாவது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மாவுக்கு முன்பு 17,253 ரன்கள் உடன் சேவாக்கும், 17266 ரன்கள் உடன் தோனியும் இருக்கிறார்கள். இதனால் ரோஹித் சர்மா இன்னும் இரண்டு மாதத்தில் இந்த பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ரோஹித் சர்மா அடித்த ஒரு சிக்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுழற் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை விட அதிவேகமாக ரன்களை சேர்க்கும் நிலைக்கும் இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now