
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 117 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 11 ஓவர்களிலேயே 121 ரன்கள் குவித்து போட்டியை வெற்றிகரமாக முடித்தது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியை போன்றே இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.