
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் இந்திய அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த அணிக்கு துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது பிசிசிஐ. இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற கேப்டனான ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.