
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி 177 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதே ஆடுகளத்தில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலே 12 ரன்கள் விளாசினார்.
ரோஹித் சர்மாவை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் எடுத்த முயற்சி ஏதும் பலன் அளிக்கவில்லை. அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, நாதன் லையன் மர்ஃபி ஆகியோர்களின் பந்துவீச்சை ரோஹித் சர்மா அபாரமாக எதிர்கொண்டார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 77 ரன்கள் அடித்திருந்தது.
இதில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் மட்டும் 56 ஆகும். வழக்கம்போல் கே எல் ராகுல் 71 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி 100 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கிறது. கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருப்பதால் இன்று ஒரு நாள் முழுவதும் பேட்டிங் செய்து கூடுதலாக 250 ரன்கள் சேர்த்தால் அது இந்திய அணிக்கு பெரிய சாதகமாக அமையும்.