
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் கைல் வெர்ரைன் ஆகியோரும் சதங்களை விளாசிய நிலையில், இறுதியில் மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 615 ரன்களைச் சேர்த்து ஆல் ஆவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வாரும் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.