
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், கடந்த சில காலங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முயன்றுவருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். சமீப ஆண்டுகளாகவே சிறந்த ஃபார்மிலும் உள்ளார். எனினும், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக அவ்வப்போது ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணிகளில் இடம்பெற்றிருந்தாலும், ரிசர்வ் பிளேயராகவே இடம்பெற்றிருந்தார்.
உலகக் கோப்பையில் நான்காமிடத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெறலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் அவருக்கு இடம்கிடைக்கவில்லை. தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட அணியே விளையாடி வருகிறது.