
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இது டிராவாகுமா? முடிவு வருமா என்பதை தீர்மாணிக்கும் முடிவு இந்தியாவுக்கு இருக்கிறது. கடைசி நாளான இன்று இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறும்.
இதனிடையே இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் எந்த வீரரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும் என்று கூறியுள்ளார். கேஎல் ராகுலா ஷுப்மன் கில்லா என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஷுப்மன் கில்லை தான் தொடக்க வீரராக அணியில் தேர்வு செய்வேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பு அவர் டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். ஷுப்மன் கில் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடுவார்.
ஷுப்மன் கில் ஒரு வெற்றி குதிரை. அவர் மீது நீங்கள் தைரியமாக பணத்தை போடலாம்( நம்பிக்கை வைக்கலாம்) . என்னைக் கேட்டால் 2033 ஆம் ஆண்டு வரை ஷுப்மன் கில் ஆதிக்கம் இந்திய அணியில் இருக்கும். அதுவரை அவருடைய இடத்தை அசைக்க முடியாது. கேஎல் ராகுல் தற்போது எப்படி உணர்வார் என்பது எனக்கு நன்றாக தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்யும் பணியை ராகுல் கண்டிப்பாக விரும்ப மாட்டார்.