
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய அணியில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கபட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.