
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இப்போட்டியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 60 ரன்களைச் சேர்க்க மற்றொரு தொடக்க வீர்ரான உஸ்மான் கவாஜா 57 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டிவ் ஸ்மித் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த கேப்டன் பட் கம்மின்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். இதில் கம்மின்ஸ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை ஒரு ரன்னில் தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.