இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.
இந்திய அணி தனது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நாளை மறுநாள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடுகிறது. டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் டி20 தொடரில் விளையாடுகிறார்.
மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்காவது போட்டிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை மூன்று போட்டிக்குமான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் காரணமாக, இந்திய பேட்டிங் வரிசை எப்படி அமைக்கப்படும் என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.
Trending
மேலும் இந்த டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் விளையாட விரும்பவில்லை என்பதாக கூறப்பட்டது. அதேசமயத்தில் இவர்கள் இருவரையும் மேற்கொண்டு இந்திய டி20 அணியில் வைத்திருக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை என்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
இந்நிலையில் சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எந்த வகையிலும் இருதரப்பு டி20 போட்டிகள் முக்கியமில்லை என்று அர்த்தமல்ல. அனைத்து வீரர்களிடம் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன். ரோகித், விராட் போன்ற வீரர்கள் ஐபிஎல் அல்லது இந்தியா ஆகிய எந்த அணிக்காக இருந்தாலும் தங்களுடைய டி20 ஆட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பார்க்கிறார்கள்.
அதனால் இருதரப்பு தொடர்களின் போது இளைய வீரர்களின் செயல்பாடுகளை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். குறிப்பாக போட்டியின் விழிப்புணர்வு, அழுத்த சூழ்நிலைகளில் அசத்துவது, இந்திய ஜெர்ஸியில் மாறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி அவர்கள் புரிந்து செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now