டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
Trending
அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து அணி கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாத ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித் அகர்கர்,"துணை கேப்டன்ஷிப் பதவியை பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இதுவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
நம்முடைய முதல் போட்டிக்கு முன்பாக நமக்கு ஒரு மாதம் இடைவெளி இருக்கிறது. எனவே ஃபிட்டாக இருக்கும் வரை பாண்டியா செய்யக்கூடிய வேலையை செய்வதற்கு மாற்று வீரர்கள் இல்லை. காயத்திற்கு பின் அவர் நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளார். எனவே பந்துவீச்சு உட்பட தன்னுடைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் கேஎல் ராகுல் இந்திய அணியில் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அகர்கர், ;நடப்பு ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட எங்களுக்கு மிடில்-ஆர்டரில் விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தான் தேவை. அதனால் தான் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளோம்” என்று கூறினார்.
தொடர்ந்து ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய அவர், “ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை. இந்திய அணியின் காம்பினேஷனை பொறுத்து வீரர்களின் தேர்வு அமைந்தது. அணியில் நான்கு சுழற்பந்துவீச்சாளர் வேண்டும் என்பது ரோஹித் சர்மாவின் முடிவு. அதன் காரணமாக சஹால், அக்ஸர் படேல் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளோம். அதேபோல் மிடில் ஆர்டரில் ஒரு ஹிட்டர் தேவையாக இருந்தார். ஏனெனில் டாப் ஆர்டரில் எங்களுக்கு தேவையாக வீரர்கள் உள்ளனர்.
மேலும் ஷிவம் தூபே இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவரால் சில ஓவர்களும் வீச முடியும் என்ற காரணத்தினாலேயே அவரை நாங்கள் தேர்வுசெய்தோம். ஆனாலும் பிளேயிங் லெவனில் சிவம் துபே இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. இவையனைத்தும் சூழல், காம்பினேஷன் ஆகியவற்றை பொறுத்தும், எதிரணியை பொறுத்து மட்டுமே முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரைத்தொடர்ந்து நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “அணித்தேர்வு குறித்து நான் அதிகம் பேச விருமபவில்லை. ஏனெனில் இதனை எதிரணி வீரர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். நான் நான்கு ஸ்பின்னர்கள் வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம். மேலும் இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரை அனைத்து போட்டிகளும் காலை தொடங்கும் என நினைக்கிறே. அதன் காரணமாக இப்போது அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், நான்கு ஸ்பின்னர்களை அழைத்து செல்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் ஆஃப் ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இந்த அணியில் ஆப் ஸ்பின்னர் இருப்பதைப் பற்றி நாங்கள் அதிகமாகவே விவாதித்தோம். ஆனால் முக்கிய ஸ்பின்னர்களான வஷிங்கடன் சுந்தர் பெரிதளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. அவரது காயம் காரணமாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பின் அக்ஸர் படேலா அல்லது அஸ்வினா என்பதுதான் எங்கள் கேள்வியாக இருந்தது. இதில் அஸ்வின் இந்த ஃபார்மட்டில் சமீபத்தில் பெரிதாக விளையாடியதில்லை. அதன் காரணமாக அக்ஸர் படேல் எங்களுக்கு நல்ல தேர்வாக இருந்தார். மேலும் அவர் இடது கை பேட்டர் என்பதும் ஒரு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now