
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் இந்த தொடரில் இடம் பெற்ற இந்திய அணி வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கின்றனர். முதலில் மும்பையிலிருந்து துபாய் சென்று பிறகு அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டுச் செல்கின்றனர். அதன்படி நேற்றைய தினம் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் இடம் அமெரிக்கா புறப்பட்டனர்.