
ZIM vs SA: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் ருபின் ஹர்மான் ஆகியோர் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்காவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பிரையன் பென்னட் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் மதவெரே 13 ரன்களுக்கும், மடாண்டே 8 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் பென்னட்டுடன் இணைந்த ரியான் பார்ல் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பென்னட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்து பென்னட் ஆட்டமிழந்தார்.