
இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது.
இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி ஆடிய இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மண் கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய சத்தீஸ்வர் புஜாரா 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.
அவருடன் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் களத்தில் உள்ளார். இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 191 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைச்சதம் 14 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் அரை சதமாகும்.