
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இன்று விசாகப்பட்டினத்தில் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டி செய்த இந்திய அணி 117 ரன்களுக்கு 26 ஓவர்களில் சுருண்டது. மிட்சல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கட்டுகளை அள்ளினார். இந்திய அணிக்கும், இந்திய அணி ரசிகர்களுக்கும் இது ஒருபுறம் சோகம் என்றால் அதற்கு அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் செய்தது பெரிய சோகமாக அமைந்தது.
கடந்த ஆட்டத்தில் துவக்க ஜோடியாக ஆஸ்திரேலியா அணிக்கு களம் கண்ட ஹெட் மற்றும் மார்ஷ் இந்த முறையும் களம் கண்டு இந்தியா கொடுத்த இலக்கை வெறும் பதினொரு ஓவர்களில் அடித்து துவம்சம் செய்து விட்டார்கள். ஹெட் முப்பது பந்துகளில் 10 பவுண்டரிகள் உடன் 51 ரன்களையும், மார்ச் 36 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 66 ரன்களையும் குவித்து, இந்தியா அணிக்கு பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்தார்கள்.