
இந்திய கிரிக்கெட் தன்னுடைய வளர்ச்சியின் அழுத்தமான புள்ளியை சவுரவ் கங்குலி கேப்டன்சியின் கீழ் பதித்தது. பல இளம் திறமைமிக்க புதிய வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்குள் வருவதற்கான கதவை சவுரவ் கங்குலி திறந்து வைத்தார். 2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் சென்றது.
சவுரவ் கங்குலி அமைத்த அந்த இந்திய கிரிகெட்டுக்கான வளர்ச்சி அடிப்படையில் இருந்து, மகேந்திர சிங் தோனி மேல் நோக்கி இந்திய கிரிக்கெட்டை கொண்டு சென்றார். அவரது தலைமையின் கீழும் சில திறமைமிக்க இளம் வீரர்கள் வந்தார்கள். மேலும் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணியின் வசம் வந்தது.
இதற்கு அடுத்து கேப்டன் பொறுப்பு விராட் கோலியின் கைகளுக்குச் செல்ல, இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் கொஞ்சம் தடுமாறினாலும் கூட, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியை மிகச் சிறப்பான உயரத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு அடுத்து சில பிரச்சனைகளால் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற, அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திற்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்தார்கள்.