சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இன்று அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியானது இன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், ஆனால் பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இன்றைய தினம் விராட் கோலி சமூக வலைதள பதிவின் மூலம் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் ‘பேக்கி ப்ளூ”(டெஸ்ட் தொப்பி) அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் நான் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. நான் வெள்ளைச் சட்டையில் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட சிறப்பு இருக்கிறது.
மேலும் இந்த வடிவத்தில் அமைதியான வாழ்க்கை, நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத ஆனால் என்றென்றும் உங்களுடன் தங்கியிருக்கும் சிறிய தருணங்கள் நான் பெற்றிருக்கிறேன். தற்போது இந்த வடிவத்திலிருந்து நான் ஓய்வு பெறும் முடிவு எளிதானது அல்ல. ஆனால் இதுதான் சரியான நேரம் என்று உணர்கிறேன். என்னிடம் உள்ள அனைத்தையும் நான் இதற்குக் கொடுத்திருக்கிறேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட இது எனக்கு மிக அதிகமாகத் திருப்பித் தந்துள்ளது.
இந்த விளையாட்டுக்காகவும், நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்காகவும், இந்த பயணத்தில் என்னைப் பார்த்ததாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்கு, மனதார நன்றியை தெரிவிப்பதுடன் இதனை நான் கடந்து செல்கிறேன்.நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன். #269, விடைபெறுகிறேன்.”என்று பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
தற்போது 36 வயதான விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஆண்டு, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now