
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பில் சால்ட் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதார் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினார். இதில் விராட் கோலி 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து ரஜத் பட்டிதாரும் 64 ரன்களுடன் நடையைக் கட்ட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.