
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்ற நிலையில், மேலும் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் தற்சமயம் எழுந்துள்ளது.
ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வேறு எந்த சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. இதில் சமீபத்தில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கூட முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி, மூன்றாவது டி20 போட்டியில் மட்டுமே விளையாடினர்.